பார்ப்பனரல்லாதார் மகாநாடு (குடி அரசு - தலையங்கம் - 08.05.1927)

Rate this item
(0 votes)

மதுரை பார்ப்பனரல்லாதார் மகாநாட்டிற்குப் பிறகு அம்மகாநாட்டின் தீர்மானங்களைத்  தமிழ்நாட்டில் அமுலில் கொண்டு வருவதற்காக ஒவ்வொரு ஜில்லாவிலும் ஜில்லா மகாநாடு கூட்டவேண்டுமென்று 3, 4 மாதங்களாகவே எழுதி வந்திருப்பது வாசகர்களுக்குத் தெரியும்.  ஆனால் சில ஜில்லாக்கள் இதைப் பற்றி எவ்விதக் கவலையும் எடுத்துக் கொண்டதாக தெரியவேயில்லை.  தஞ்சை, கோயமுத்தூர், சேலம், வடஆற்காடு ஆகிய ஜில்லாக்கள் மாத்திரம் மகாநாடு கூட்டும் விஷயத்தில் முயற்சி எடுத்துக் கொண்டிருப்பது வெளிப்படையாய் தெரிய வருகிறது.  மற்றும் இரண்டொரு ஜில்லாக்கள் நமக்கு மாத்திரம் தனித்த முறையில் தெரியப்படுத்தி இருக்கிறதே அல்லாமல் காரியத்தில் எவ்வித முயற்சியும் எடுத்துக் கொண்டதாய் தெரியவில்லை.  கோயமுத்தூர் ஜில்லாவில் இம்மாத மத்தியில் மகாநாட்டை நடத்துவதாயிருந்ததானது சிலரின் சௌகரியத்தை உத்தேசித்து அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டு விட்டது.  ஆனபோதிலும் மகாநாட்டிற்காக ஆக வேண்டிய விஷயங்களை கோயமுத்தூர் பிரமுகர்களான ஸ்ரீமான்கள் வெரிவாட செட்டியார், சம்மந்த முதலியார், இரத்தினசபாபதி முதலியார், சாத்தப்ப செட்டியார்,  இரத்தினசபாபதி கவுண்டர், ஞளுழு.வெங்கிடுசாமி நாயுடு, அருணாசலம் செட்டியார் முதலிய கனவான்கள் வெகு ஊக்கமாகக் கவனித்து வருகிறார்கள்.  இதுவரை ஏறக்குறைய 2500 ரூபாய் வரை வசூலும் செய்து விட்டார்கள்.  மற்றபடி வட ஆற்காடு ஜில்லாக்காரரும் கூடுமானவரை ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.  பல காரணங்களால் ஒத்தி வைக்க நேரிட்டாலும் சீக்கிரம் நடைபெறும்.  சேலம் மகாநாடும் சீக்கிரத்தில் நடைபெறலாம்.  ஆனால் அந்த ஜில்லா பிரமுகர்கள் இது சமயம் ஜில்லாபோர்டு தேர்தல்களில் ஈடுபட்டிருப்பதால் இது முடிந்த பிறகு தான் கவனிக்கக்கூடும் என்றும் நினைக்க வேண்டி இருக்கிறது.

மற்றபடி தஞ்சை ஜில்லா மகாநாடோ,  நேற்றும் இன்றுமாய் மாயவரத்தில் மயூரமணி ஸ்ரீமான் சு. சின்னையாபிள்ளை அவர்கள் முயற்சியிலும் மற்றும் பல கனவான்கள் முயற்சியாலும் மலையாளம் ஸ்ரீமான் திவான்பகதூர்  ஆ. கிருஷ்ணன் நாயர் க்ஷ.ஹ.க்ஷ.டு., ஆ.டு.ஊ. அவர்கள் தலைமையின் கீழ்  சிறப்பாக நடைபெறுகிறது.  வரவேற்புத் தலைவரான மயூரமணி  சின்னையாபிள்ளை அவர்களின் வரவேற்புப் பிரசங்கம் இனியும் நமது கைக்கு கிடைக்கவில்லை.

 

மகாநாட்டின் அக்கிராசனரான திவான் பகதூர் கிருஷ்ணன் நாயரின் அக்கிராசனப் பிரசங்கத்தை இன்று மற்றோரிடத்தில் பிரசுரித்திருக்கிறோம்.  அதை ஒவ்வொருவரும்  தயவு செய்து ஊன்றிப் படிக்க வேண்டுமாய் கோருகிறோம்.  திவான் பகதூர் நாயர் அவர்கள் தனது பிரசங்கத்தில் முதலாவது பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் தத்துவத்தைப் பற்றியும் கொள்கைகளைப் பற்றியும் அது ஜனநாயகத்திற்கு பாடுபடுவதாகும் என்பதைப் பற்றியும் வெகு விளக்கமாக எடுத்துச் சொல்லியிருப்பதோடு சுயநலக்காரர் இவ்வியக்கத்தின் மீது கூறப்படும் பழிகளுக்குச் சரியான ஆணித்தரமான பதில்களும் சொல்லியிருக்கிறார். அவற்றுள் உத்தியோக வேட்டை என்பதைப்பற்றி சொல்லியிருக்கும் விஷயத்தை நடுநிலைமைக்காரர் எவர் படித்துப் பார்த்தாலும்,  எவ்வளவு அறியாதவராயிருந்தாலும், பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் தத்துவம் இன்னது என்பது விளங்கிவிடும்.

 

பிறகு தேசத்தின் பெரும்பகுதியினரான விவசாயிகளின் விஷயமாய் சாச்வத நிலத்தீர்வையின் அவஸ்யத்தைப் பற்றியும் அதற்காக அவர்கள் வெகுநாளாக  பாடுபட்டு வந்திருப்பதைப் பற்றியும் சொல்லியிருக்கிறார்.  அதன்பிறகு நமது மாகாண அரசியல் நிலையைப் பற்றியதாக தற்கால மந்திரி சபையைப் பற்றியும் அதன் ஊழல்களைப் பற்றியும் அதனால் நமது சமூகத்திற்கும் நாட்டிற்கும் ஏற்படும் கெடுதியைப்  பற்றியும் உள்ளது உள்ளபடி எடுத்துச் சொல்லியிருக்கிறார்.  அதன்பிறகு நமது நாட்டுக் காங்கிரசின் யோக்கியதையையும் காங்கிரஸ் பக்தர்களான சுயராஜ்யக் கக்ஷியாரின் யோக்கியதையையும் அவர்கள் மக்களை ஏமாற்றி துரோகம் செய்த விஷயத்தையும் எடுத்துச் சொல்லியிருப்பதோடு அப்பேரை வைத்துக்கொண்டு பார்ப்பனரல்லாதாருக்குச் செய்துவரும் கெடுதிகளையும் சொல்லியிருக்கிறார்.  இதில் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி என்கிற பார்ப்பனர் கொண்டுவந்த யூனிவர்சிடி அமெண்ட்மெண்ட் பில் என்கிற சர்வகலாசாலை சட்டத்திருத்த மசோதா என்பதையும் அதன் சூழ்ச்சியையும் விளக்கி அதை உதாரணமாகக் காட்டி இருக்கிறார்.  பிறகு லார்ட்  பர்க்கன் ஷெட்டின் பேச்சைப் பற்றியும், இனி அடுத்த நிலைமை என்ன என்பதைப் பற்றியும், வங்காள அடக்குமுறையைப் பற்றியும், தென் ஆப்பிரிக்கா இந்தியர்களைப் பற்றியும் இந்த இயக்கப் பிரசாரத்தைப் பற்றியும் விவாதித்து விவரமாகச்  சொல்லியிருக்கிறார்.  

 

ஆகவே திவான் பகதூர் கிருஷ்ணன் நாயர் சொல்லியிருப்பதுகள் எல்லாம் அநேகமாய் மிகவும் சரியானது என்றே நாம் ஒப்புக்கொள்ளுகிறோமாயினும், இனியும் சொல்லியிருக்க வேண்டிய இரண்டொரு முக்கிய விஷயங்களைச் சரியாகச் சொல்ல விட்டுவிட்டார் என்றே சொல்லுவோம்.  அதாவது மதுரை மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட நிர்மாணத் திட்டம் என்பதைப் பற்றித்தான். ஏனெனில் எவ்வளவு அரசியல் தத்துவத்தைப் பற்றிப் பேசினாலும் கடைசியில் நாம் செய்ய வேண்டிய காரியத்தைப் பற்றியும் பேசினால்தான் அப்பேச்சு முடிவு பெற்றதாகும்.  அரசியல் திட்டங்கள் என்பதுகளினாலும், அரசியல் இயக்கங்கள் என்பதுகளினாலுமே நமது நாடு இக்கெடுதிக்கு ஆளாயிருக்கிறது என்று நாம் உறுதியாகச் சொல்லுவோம்.  இதிலிருந்து விடுபட வேண்டுமானால் நிர்மாணத்  திட்டத்தைத் தவிர வேறு எவ்வழிகளினாலும் முடியவே முடியாது என்பது நமது அபிப்ராயம்.  மேலே சொல்லியுள்ள குற்றமுள்ளதும் நாணயக் குறைவுள்ளதுமான  மந்திரிமார்களின் ஆக்ஷி முறையும், காங்கிரஸ் சுயராஜ்யக்கக்ஷி ஆகியதுகளும் அடியோடு ஒழிந்து போவதாகவோ அல்லது ஜஸ்டிஸ் கக்ஷியார் கைக்கே வந்து விடுவதாகவோ வைத்துக் கொண்டாலும் இவர்கள் செய்ததைத்தான் ஜஸ்டிஸ் கட்சியாரும் செய்ய முடியுமே அல்லாமல்  அதுகளினால் வேறொன்றுமே பிரமாதமாகச் செய்துவிட முடியாது.  

 

உதாரணமாக ஜஸ்டிஸ் கட்சியார் ஆதிக்கத்தில் உள்ள காலத்தில் என்ன செய்தார்களோ அதையே தான் என்னென்னமோ கட்சியார் என்று பெயர் சொல்லிக் கொள்ளுகிறவர்களும் செய்கிறார்கள்.  அதற்கும் இதற்கும் உள்ள ஒரே ஒரு வித்தியாசம் மாத்திரம் என்னவென்றால் ஜஸ்டிஸ் கட்சியார் இதே காரியத்தை நாணயமாகவும், யோக்கியமாகவும், வெளிப்படையாகவும் செய்துவந்தார்கள்.  மக்களிடத்தில் உண்மையைச் சொல்லி சொன்னது போல் உண்மையாய் நடந்து கொண்டார்கள்,  காங்கிரஸ் முதலிய கட்சிக்காரர்கள் என்பவர்களோ நாணயக் குறைவாகவும், யோக்கியப் பொறுப்பற்றதனமாகவும், மக்களை ஏமாற்றியதோடு தனித் தனி சுயநலக்காரராயும் நடந்து கொண்டார்கள்.  ஆனால் இது அவர்கள் குற்றமல்ல.  அவ்வியக்கங்களின் தத்துவங்களே அது தான்.  ஆகவே, நடந்து கொண்ட மாதிரிதான் வித்தியாசமே அல்லாமல் செய்யக்கூடியதில் எல்லாம் ஒன்றே தான்.  ஆதலால் இவற்றைப்பற்றி நமக்கு அதிகமான கவலை இல்லை.  நாட்டுக்கும் மக்களுக்கும் உண்மையான நல்ல பலனை அளிக்கக்கூடிய நிர்மாணத் திட்டத்தினிடம்தான் மக்களின் கவனத்தை இழுக்கும்படிச் செய்ய வேண்டும்.  அதுவேதான் நமது மகாநாடுகளுக்கு அமுலில் கொண்டுவர வேண்டிய முக்கிய திட்டங்களாகும்.  இக்காரியங்களைப்பற்றி  ஸ்ரீமான் நாடார் முன்னுரை பிரசாரத்தில் சொல்லாவிட்டாலும் அவர் தலைமையில் கூடியுள்ள மகாநாடு செய்து தீருமென்று உறுதியாக நம்பியிருக்கிறோம்.

(குடி அரசு - தலையங்கம் - 08.05.1927)

Read 74 times

Like and Follow us on Facebook Page

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.