“தேசிய அறிக்கை”. குடி அரசு - தலையங்கம் - 03.10.1926

Rate this item
(0 votes)

மேல்படி தலையங்கம் கொண்ட அறிக்கையொன்று சென்னை ‘தமிழ்நாடு’ காரியாலயத்திலிருந்து நமக்கு அனுப்பப்பட்டதை வேறு இடத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. இதை அனுசரித்து ஸ்ரீமான் டாக்டர் வரதராஜுலு நாயுடுகார் அவர்களால் ஒரு அச்சடித்த அழைப்புக் கார்டும் சிலருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அவ்வழைப்புக்கு யாவரும் போக வேண்டுமென்றே வேண்டிக் கொள்ளுகிறோம் . ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் தாயாருக்கு இது சமயம் கடினமான காயலாவாயிருக்கிற படியால் 9-ந் தேதிக்கு சென்னை போக அவருக்கு சவுகரியமாயிருக்குமோ இருக்காதோ என்பது சந்தேகமாயினும் அது பற்றி நமது அபிப்பிராயத்தை தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். தேசீய அறிக்கையில் குறித்திருக்கும் ஒரு விஷயத்தை நாமும் பலமாய் ஆதரிக்கிறோம். அதாவது, “சுயராஜ்யக் கக்ஷி பிராமணரல்லாதாருக்கு விரோதமாய்க் கட்டுப்பாடாகப் பிரசாரம் செய்து வருகிறது. இம்மாதிரியான நிலைமையை இன்னும் வளர விட்டுக் கொண்டே போனால் பிராமணரல்லாதாருக்குக் கெடுதல் வரும்” என்பதாகும்.

இந்த அபிப்பிராயத்தை நாம் இரண்டு வருஷத்திற்கு முன்னதாகவே கொண்டுள்ளோம். ஆதலால் ‘தமிழ்நாடு’ம் டாக்டர் நாயுடுகார் அவர்களும் இப்போது இதை வெளிப்படையாய் வலியுறுத்த முன் வந்ததற்குப் பார்ப்பனரல்லாத மக்கள் அவர்களுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருப்பதுடன் இதற்காக ஸ்ரீமான் டாக்டர் நாயுடு அவர்கள் எடுத்துக் கொள்ளும் எவ்வித முயற்சிக்கும் ஆதரவளிக்க வேண்டியது தமிழ் மக்கள் கடமை என்றே சொல்லுவோம். ஆனால் காங்கிரஸ் என்னும் விஷயத்தில் டாக்டர் நாயுடு அவர்கள் அபிப்பிராயத்தை நாம் ஆதரிக்க முடியாததற்கு மிகுதியும் வருந்துகிறோம். சுயராஜ்யம் என்னும் தேசீய உணர்ச்சியில் டாக்டர் நாயுடு அவர்களுக்கு நாம் மேம்பட்டவரல்லவென்றாலும் குறைந்தவரல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்ளுவதோடு சுயராஜ்யத்தை விட மக்கள் சுயமரியாதையே சிறந்ததென்பதும், அதுவே மக்களின் பிறப்புரிமை என்பதும் நமது அபிப்பிராயம். அல்லாமலும் காங்கிரஸ் என்கிற விஷயத்திலும் அதில் உள்ள கொள்கையை உத்தேசித்து தான் அதனிடம் மக்கள் பக்தி செலுத்தவேண்டுமே அல்லாமல் காங்கிரஸ் என்கிற பெயருக்கே பக்தி செலுத்த வேண்டும் என்று சொல்லுவதை நாம் ஒப்புக் கொள்ள முடியாததற்கும் மன்னிக்க வேண்டுகிறோம்.

 

உதாரணமாக, பிராமணன் என்பவன் மதிக்கத்தக்கவன் என்றால் பிராமணன் என்கிற பெயரை உடைத்தாயிருப்பதற்காகவா? அல்லது பிராமணர் என்பதற்கு ஏற்பட்ட கொள்கையை உடைத்தாயிருப்பதற்காகவா? அன்றியும் நமது டாக்டர் நாயுடுகாரு அவர்களே சுயராஜ்யக் கட்சியை முன்பெல்லாம் ஆதரித்த காலத்திலும் தேச முன்னேற்றத்தை உத்தேசித்துதான் தாம் அதை ஆதரிப்பதாகச் சொல்லி வந்தார். ஏனெனில் அதனிடத்தில் சில ஒப்புக் கொள்ளத்தக்க கொள்கை இருப்பதாலேயே என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் இப்போதும் அதே பெயரும், அதே கொள்கையும், அதே திட்டமும் இருக்கும் போதே “சுயராஜ்யக் கட்சி பிராமணக் கட்சி; அது அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றால் பிராமணரல்லாதாருடைய கதி அதோகதியாய் போய்விடும்” என்று ‘தமிழ்நாடு’ மூலமாய் எழுதியிருக்கிறார். இதுபோலவேதான் நாமும் காங்கிரஸ் என்பது பார்ப்பனர்களும் படித்தவர்களும் முறையே பார்ப்பனரல்லாதாரையும் பாமர மக்களையும் ஏமாற்றி உத்தியோகம் பதவி முதலியதுகள் பெற்று வாழ ஏற்பட்டு அதற்கேற்ற கொள்கைகளே அதனில் இருத்தப்பட்டிருக்கிறது என்றும், மத்தியில் மகாத்மா தலைமை வகித்து நடத்திய காலத்தில் சுயமரியாதை, உண்மையான சுயராஜ்யம் முதலியவைகள் அடையத்தக்க கொள்கைகள் அவற்றில் இருந்தது என்றும், இப்போது பழையபடி பார்ப்பனர், படித்தவர் ஆகியவருக்கு அநுகூலமாகவும் மக்கள் சுயமரியாதைக்கும் பார்ப்பனரல்லாதாருக்கும் ஆபத்தானதாகவும் உள்ள கொள்கைகளே காங்கிரசில் வைக்கப்பட்டுப் போய்விட்டதால் மக்கள் சுயமரியாதையையும் பார்ப்பனரல்லாதார் சமத்துவத்தையும் உத்தேசித்து காங்கிரசை திருத்தவோ அழிக்கவோ வேண்டியது பொது மக்களின் கடமை என்றும், ஏனெனில் காங்கிரசுக்கு இது சமயம் கொள்கை என்பதே இல்லாமல் சுயராஜ்யக் கட்சியின் கொள்கைகளைத்தான் அப்படியே தனது கொள்கையாக ஏற்றுக் கொண்டுவிட்டதென்றும் சுயராஜ்யக் கட்சி கொள்கைகளோ பார்ப்பனரல்லாதாரை அழிக்கக் கட்டுப்பாடாய்ப் பார்ப்பனர்கள் செய்து வரும் சூழ்ச்சி என்றும் இதை டாக்டர் நாயுடுகார் அவர்களே ஒப்புக் கொள்ளுகிறார் என்றும் சொல்லுகிறோம்.

 

தேசீய உணர்ச்சி மக்களுக்குள் விளங்க வேண்டும் என்கிற டாக்டர் நாயுடுகாரின் அபிப்பிராயத்தையும் நாம் மனமார ஆதரிக்கிறோம். ஆனால் இது இன்னது என்று விளக்கப்பட வேண்டும். அதற்காக ஏற்படுத்தப்படும் இயக்கத்திற்கும் முயற்சிக்கும் தேசீய உணர்ச்சிக்கேற்ற கொள்கைகளை அமைக்கவேண்டும். அப்படிக்கில்லாமல் புண்ணியம், தருமம், மோக்ஷம், தெய்வம் என்கிற பெயரைச் சொல்லிக்கொண்டு பார்ப்பனர்கள் வயிறு வளர்ப்பது போல் சுயராஜ்யம், உரிமை, தேசீய உணர்ச்சி, சர்க்காரை எதிர்த்தல், காங்கிரஸ், சுயராஜ்யக் கட்சி என்கிற பெயர்களைச் சொல்லிக் கொண்டு பாமர மக்களை ஏமாற்றி பலர் வயிறு பிழைக்கும்படியும் உத்தியோகம் பெறும்படியும் செய்துவிடக் கூடாது என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

 

அல்லாமலும் சுயராஜ்யக் கட்சியோடு ஜஸ்டிஸ் கட்சியை ஒப்பிடுவதிலும் நாம், டாக்டர் நாயுடுகாரு அவர்களின் அபிப்பிராயத்திற்கு சற்று மாறுபட நேர்ந்ததற்கும் மன்னிக்க வேண்டுகிறோம். சுயராஜ்யக் கட்சியைப் பற்றி டாக்டர் நாயுடுகாரே அது பார்ப்பனரல்லாதாருக்கு விரோதமாய் கட்டுப்பாடாகப் பிரசாரம் செய்யும் கட்சி என்று ஒப்புக்கொண்டு விட்டதால் இனி நாம் அதன் கேட்டைப் பற்றி பேச வேண்டியதில்லை. இப்படியிருக்க ஜஸ்டிஸ் கட்சியை அதற்குச் சமமாய்ச் சொல்லக் காரணம் என்ன? ஜஸ்டிஸ் கட்சியானது பார்ப்பனரல்லாதார் நன்மைக்காக ஏற்பட்டது என்றும், அது நமது நாட்டுப் பார்ப்பனரல்லாதாருடைய கட்சி என்றும், அது பார்ப்பனரல்லாதாருக்கு பல நன்மைகள் செய்திருக்கிறது என்றும் டாக்டர் நாயுடுகாரே பல தடவைகளில் பேசியும் ‘‘தமிழ்நாட்டில்’’ எழுதியும் இருக்கிறார். அதற்கும் பல ஆதாரங்கள் இருக்கின்றன. அப்படிக்கு இருக்க அந்த கட்சியை பார்ப்பனரல்லாதாரை அழிக்க கட்டுப்பாடாய் வேலை செய்யும் சுயராஜ்யக் கட்சிக்கு சமமாக எப்படி சொல்லக்கூடும்.

ஜஸ்டிஸ் கட்சியார் உத்தியோகம் பெறுகிறார்கள் என்று சொல்வதானால் உத்தியோகம் பெறக்கூடாது என்று எந்த தேசீய திட்டம் சொல்லுகிறது. காங்கிரசிலாகட்டும் வேறு எதிலாகட்டும் சர்க்காரோடு ஒத்துழையாமை என்பதே கிடையாது. உத்தியோகங்களோ இருக்கின்றன; இதை என்ன செய்வது? ஜஸ்டிஸ் கட்சியார் இந்த உத்தியோகங்களை வேண்டாமென்று சொல்வதன் மூலம் சுயமரியாதைக்காவது சுயராஜ்யத்திற்காவது காங்கிரசுக்காவது லாபமுண்டா? அப்படியிருக்க ஜஸ்டிஸ் கட்சி யார் உத்தியோகம் பெறுகிறார், உத்தியோகம் பெறுகிறார் என்று சொல்லுவதின் அர்த்தமென்ன? மொத்தத்தில் நமது தேசத்தில் உள்ள உத்தியோகம்தான் எவ்வளவு? காங்கிரஸ்காரர்கள் என்று சொல்லிக் கொண்ட பிராமணர்கள் அனுபவிப்பது எவ்வளவு? மிதவாதிகள் என்று சொல்லிக் கொண்ட பிராமணர்கள் அனுபவிப்பது எவ்வளவு? இவர்கள் சந்ததிகள் அனுபவிப்பது எவ்வளவு? உண்மையில் ஒன்றிலும் சேராத மக்கள் அனுபவிப்பது எவ்வளவு? இந்தக் கணக்குப் பார்த்தால் ஜஸ்டிஸ் கட்சியார் அனுபவிப்பது எவ்வளவு? என்பதும், அதினால் சர்க்காருக்கு ஏற்பட்டு விட்டதாகச் சொல்லும் பலம் எவ்வளவு? என்பதும், அவர்கள் அனுபவிக்காவிட்டால் சர்க்கார் பலம் எவ்வளவு குறையும் என்பதும், அதோடு பார்ப்பனரல்லாதார் கதி என்னவாகும் என்பதும் விளங்காமல் போகாது.

 

பொதுவாக ஜஸ்டிஸ் கட்சியின் அரசியல் திட்டத்தை ஒத்துழையா மனப்பான்மை கொண்டவர்கள் எவரும் ஆதரிக்க முடியாது என்பதை நாமும் ஒப்புக் கொள்ளுகிறோமானாலும் பார்ப்பனரல்லாதார் நன்மையை உத்தேசித்து ஜஸ்டிஸ் கட்சியுடனும் அவசியமேற்பட்டால் சர்க்காருடன் ஒத்துழைப்பதாக டாக்டர் நாயுடுகாரு அவர்கள் சொல்லியுமிருக்கிறார். ஆதலால் டாக்டர் நாயுடுகாரு வாக்குப்படியே சுயராஜ்யக் கட்சி பார்ப்பனரல்லாதாருக்கு விரோதமாய் பார்ப்பனரல்லாதாரை அடியோடு ஒழிக்க கட்டுப்பாடாய் வேலை செய்கிற கக்ஷியாய்ப் போய்விட்டதால் பார்ப்பனரல்லாதார் நன்மைக்கு உழைக்கிறவர்கள் சர்க்காரோடு ஒத்துழைக்காவிட்டாலும் ஜஸ்டிஸ் கக்ஷியாரோடாவது ஒத்துழைக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள். அதுவும் இல்லாவிட்டாலும் அதற்கு கெடுதி செய்யாமலாவது இருக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள். பார்ப்பனரல்லாதாருக்கு ஏற்படப் போகும் ஆபத்தை நீக்கும் பொருட்டும் தேசீய உணர்ச்சியை வளர்க்கும் பொருட்டும் 8.10.26-ல் அல்லது 9.10.26-ல் சென்னை ‘தமிழ்நாடு’ ஆபீசில் கூட்டப்படும் தேசீயவாதிகள் மகாநாட்டுக்கு இதை விண்ணப்பித்துக் கொள்ளுகிறோம்.

(குடி அரசு - தலையங்கம் - 03.10.1926)

Read 17 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.