கோயமுத்தூர் ஜில்லா சட்டசபைத் தேர்தல் நிலைமை. குடி அரசு - கட்டுரை - 26.09.1926

Rate this item
(0 votes)

கோயமுத்தூர் ஜில்லாவில் சட்டசபைத் தேர்தலுக்கு ஏற்பட்ட 3 ஸ்தானங்களுக்கு இதுவரை ஐந்து கனவான்கள் நிற்கிறார்கள். அவர்கள்:-

ஸ்ரீமான் சி.எஸ்.ரத்தினசபாபதி முதலியார், வி.சி. வெள்ளியங்கிரிக் கவுண்டர், டி.எ. ராமலிங்கம் செட்டியார், சி.வி. வெங்கிட்டரமணய்யங்கார், பட்டக்காரர் வேணாவுடையாக் கவுண்டர் ஆகிய ஐந்து கனவான்கள். இவர்களுள் ஸ்ரீமான்கள் வெங்கிட்டரமணய்யங்கார், ராமலிங்கம் செட்டியார், வெள்ளியங்கிரிக் கவுண்டர் ஆகிய மூவரும் இதற்கு முன் இரண்டு தடவை 6 வருஷம் சட்டசபையிலிருந்து அப்பதவியையும் பெருமையையும் அனுபவித்து வந்தவர்கள். இவர்கள் இதுவரை என்ன செய்தார்கள் என்பதைப் பற்றி நமக்கு அதிகக் கவலையில்லை. ஏனெனில் சட்டசபையில் அரசியல் சம்பந்தமாய் ஒரு காரியமும் செய்ய முடியாது என்பது நமது தாழ்மையானதும் உறுதியானதுமான அபிப்பிராயம். ஆனால் அதன் மூலம் தங்கள் தங்கள் சமூகத்தின் சுயமரியாதைக்கு ஏதாவது உழைக்க அதை உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்பதோடு அப்பதவி ஒரு கௌரவமும் அந்தஸ்துமுள்ள ஸ்தானம் என்றே தான் சொல்ல வேண்டும். இந்த நிலையில் இந்த பழைய மெம்பர்கள் தங்கள் தங்கள் சமூக நன்மைக்கு ஏதாவது உழைத்து வந்திருக்கிறார்களா என்பதும் இக்கௌரவ அந்தஸ்தை அடைய இஜ்ஜில்லாவிலேயே இவர்களேதான் நிரந்தரமான யோக்கியதையுடையவர்களா? அல்லது வேறு யாரும் இல்லையா? என்பதும் யோசிக்கத்தக்கன.

 

ஸ்ரீமான் ஐயங்காரவர்கள் கூடுமானவரை தனது சமூகமான பார்ப்பனர் சமூகத்தின் முன்னேற்றத்திற்கும், ஆதிக்கத்திற்கும் மிகுதியும் உழைத்து வந்ததோடு, பார்ப்பனரல்லாத சமூக முன்னேற்றத்திற்கும், அக்கட்சி கொள்கைக்கும், அச்சமூகத்தார் உத்தியோகம் முதலியன பெறுவதற்கும் எவ்வளவு முட்டுக்கட்டை போட வேண்டுமோ அவ்வளவும் போட்டு வந்தவர். உதாரணமாக, தேவஸ்தான சட்ட விஷயத்திலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவ விஷயத்திலும் எதிரிடையாய் இருந்து வந்ததோடு பார்ப்பனரல்லாத மந்திரிகளிடம் தனக்கு வேண்டிய காரியங்கள் செய்துகொண்டு, பல கமிட்டிகளிடம் ஜில்லா போர்டிலும் மெம்பர் ஸ்தானமும் பெற்றுக் கொண்டு அரசாங்க நிருவாகத்தில் பார்ப்பனரல்லாதார் ஆதிக்கத்தை ஒழித்துப் பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறுத்த எவ்வளவோ சூழ்ச்சியும் செய்து மந்திரிகள் பேரில் நம்பிக்கையில்லை என்கிற தீர்மானமும் கொண்டு வந்தவர்.

 

மற்ற இரு கனவான்களான ஸ்ரீமான்கள் செட்டியார், கவுண்டர் ஆகிய இருவர்களும் தேவஸ்தான சட்டத்திலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திலும் பார்ப்பனரல்லாதாருக்கு அனுகூலமாயிருந்தாலும் ஸ்ரீமான் செட்டியாரவர்கள் உத்தியோக விஷயமாய் மந்திரிகளோடு அபிப்பிராய பேதப்பட்ட காரணத்தால் பார்ப்பனரல்லாதார் கட்சியாகிய ஜஸ்டிஸ் கட்சியையே அழிக்க முயற்சி செய்ததோடு ஸ்ரீமான் கவுண்டர் அவர்களையும் வசப்படுத்திக் கொண்டு, பார்ப்பனரல்லாத மந்திரிகள் பேரில் நம்பிக்கையில்லாத தீர்மானத்திற்கு உடந்தையாயிருந்து மந்திரிகளுக்கு விரோதமாய் ஓட்டு செய்து கொண்டு வந்தவர்.

 

ஸ்ரீமான் கவுண்டர் அவர்களோ தனக்கென சுயேச்சையில்லாது அரசியலிலும் சமுதாயயியலிலும் ஸ்ரீமான் செட்டியாரவர்களையே கண் மூடிக் கொண்டு பின்பற்றி வந்தவர் - வருகிறவர் என்றே சொல்லலாம். இதற்கு ருஜு என்னவென்றால் செட்டியாருடன் ஜஸ்டிஸ் கட்சியிலிருந்து வெளிவந்ததுடன் அவரோடு நம்பிக்கையில்லாத தீர்மானத்திற்கு ஓட்டு கொடுத்ததும், ஸ்ரீமான் செட்டியாரோடு தஞ்சை தேசீய பிராமணரல்லாத மகாநாட்டுக் கொள்கைகளை ஒப்புக்கொண்டதும், சட்டசபையை விட்டு வெளிவந்ததாக சுயராஜ்யக் கட்சியார் ஆடிய பொய் நாடகத்தில் செட்டியாருடன் தானும் கலந்து கொண்டதும், சுயராஜ்யக் கட்சியார் தலைமையில் சட்டசபைத் தேர்தலுக்கு ஸ்ரீமான் செட்டியாருடன் தானும் நின்றதும், சுயராஜ்யக் கட்சியார் நிபந்தனையில் செட்டியாரோடு தானும் கையெழுத்திட்டதுடன் சுயராஜ்யக் கட்சியிலிருந்து விலகி விட்டதாக ஸ்ரீமான் செட்டியாரவர்கள் எழுதிய ஒரு பரிகசிக்கத்தகுந்த அர்த்தமில்லாத கடிதத்தில் தானும் கையெழுத்திட்டதும் ஆகிய காரியங்களே போதிய சான்றாகும்.

அரசியல் விஷயங்களில் ஸ்ரீமான் கவுண்டரவர்கள் இப்படியிருந்தாலும் பொதுவாய் சமூக முன்னேற்றத்தில் குற்றம் சொல்வதற்கு இடமில்லாமலேயே கூடியவரை நடந்து வந்திருக்கிறார்கள் என்பதை யாரும் ஒப்புக்கொள்வார்கள். கதர் விஷயத்தில் ஸ்ரீமான் செட்டியாரவர்களுக்கு சுத்த சுத்தமாய் நம்பிக்கையில்லாவிட்டாலும் ஸ்ரீமான் ஐயங்காரவர்கள் வெளிக்குத் தெரிய எலக்ஷன் வரையில் கதர் கட்டுவதானாலும் ஸ்ரீமான் கவுண்டரவர்கள் கதரின் உண்மைத் தத்துவத்தை அறிந்து மனப்பூர்வமாய் அதை ஆதரித்து அனுபவத்திலும் நடத்தி வருகிறவர். மதுவிலக்கு விஷயத்தில் மற்றவர்களைப் போல பொய் நாடகம் நடிக்காமல் உண்மையிலேயே பாடுபடுவதுடன் தனது மரங்களைக் கள்ளுக்கு விடாமல் இருக்கிறார். ஸ்ரீமான் சி.எஸ். இரத்தின சபாபதி முதலியார் அவர்களோ பார்ப்பனரல்லாதார் கட்சியிலும் அவர்களது முன்னேற்றத்திலும் தீவிரமானதும் மாறுபாடில்லாததுமான மன உறுதி உடையவர்; சென்ற சட்ட சபைத் தேர்தலில் நின்று பலவிதமாய் ஓட்டுப் பிரிந்ததால் வெற்றியடையாமல் போனவர்; ஜில்லா போர்டு தலைவராய் தெரிந்தெடுக்கப்பட்டிருப்பவர்; இதுவரையில் அப்பதவியை அடையாத புதியவர்; சட்டசபையில் பெருத்த அரசியல் கொள்கையைப் பற்றியோ பெரிய உத்தியோகங்களை அடைய வேண்டுமென்பதைப் பற்றியோ முறையே நம்பிக்கையும் ஆசையும் இல்லாதவர்.

 

பட்டக்காரர் ஸ்ரீமான் வேணாவுடையாக் கவுண்டர் அவர்களைப் பற்றியோவென்றால் இத்தொகுதியின் ஓட்டர்களின் பெரும் பகுதியான வகுப்பைச் சேர்ந்தவர்; இதுவரையிலும் அப்பதவியை அடையாதவர்; பெரிய சமூகமாகிய நம் நாட்டு வேளாள சமூகத் தலைவர்; சுயராஜ்யக் கட்சியின் பேரால் நிற்பதாக தெரியப்படுத்தப்பட்டவர்; ஸ்ரீமான் ஐயங்காருடன் சேர்ந்து வேலை செய்பவர்; ஐயங்காருக்கு முதல் ஓட்டு போட்டு பிறகு தனக்கு ஓட்டுப் போடும்படி கேட்பவர்; ஸ்ரீமான் ஐயங்கார் தன்னை உபயோகப்படுத்திக் கொள்வதையும் அனுமதித்துக் கொண்டிருப்பவர். சட்டசபைக்கு வர வேண்டும் என்கிற இஷ்டமுடையவரானாலும் மற்ற நான்கு கனவான்களைப்போல் அவ்வளவு ஆசையும் ஆத்திரமும் கவலையுமுள்ளவரல்ல. பொது ஜனங்கள் நம்மை தேர்ந்தெடுத்தனுப்பினால் சந்தோஷம், இல்லாவிட்டால் ஓட்டர்களின் இஷ்டம் என்று சொல்லுபவரே அல்லாமல் பணம் செலவு செய்தோ, தந்திரங்கள் செய்தோ, கட்சி உண்டாக்கியோ, ஆளைத் தூக்கி ஆள்மேல் போட்டோ, வேறு ஆட்களை உபயோகித்து கட்சி, பிரதி கட்சிகளை உபயோகப்படுத்திக் கொண்டோ சட்டசபைக்குப் போக வேண்டும் என்கிற தீவிர கவலையுடையவர் அல்ல.

இப்படியெல்லாம் இருந்தாலும் இந்த 5 கனவான்கள் நிற்பதில் யாராவது மூன்று பேருக்குத்தான் சட்டசபை ஸ்தானம் கிடைக்கக்கூடும். 2 கனவான்களுக்கு தோல்வி நிச்சயம். இப்போதிருக்கும் நிலையில் அது யாராயிருக்கலாம் என்று ஞான திருஷ்டியில் பார்ப்போமானால் நமது நாட்டின் உண்மை பிரதிநிதிகளான குடியானவர்களுக்குத் தான் தோல்வி ஏற்படக்கூடும் என்று சொல்லுவதற்கு நாம் மிகுதியும் வருத்தப்படுவதோடு, இதற்காக அவ்விரு கனவான்களையும் நம்மை மன்னிக்கும்படி வேண்டுகிறோம். ஏன் இப்படிச் சொல்லுகிறோம் என்றால் இந்த ஜில்லா ஓட்டர் தொகுதிப்படி ஓட்டர்கள் மொத்தம் 70000 பேராயிருந்தாலும் நாற்பத்தி ஐயாயிரம் பேருக்கு மேலாக வேளாளக் கவுண்டர்களாகவே இருந்தும் அவர்களுக்குள் சமூகக் கவலை என்பதே ஒரு சிறிதும் இல்லை. ஒற்றுமையும் கட்டுப்பாடும் இல்லை. பெரிய பெரிய மிராசுதாரர்களான கவுண்டர்களுக்குள்ளாகவே ஒருவருக்கொருவர் பொறாமையும் அசூயையும் இருப்பதோடு தங்களுக்கு வேண்டாதபோது சமூகக் கட்டுப்பாடாவது அபிமானமாவது மதிக்கப்படாமலும் தங்களுக்கு வேண்டியபோது சமூகப் பேரையும் கட்டுப்பாட்டையும் சொல்லிக் கொண்டு வருவதுமாய் இருப்பதால் அச்சமூகத்தில் இதுவரை உண்மையான கட்டுப்பாடு வளர்வதற்கு இடம் இல்லாமல் போய்விட்டது.

 

நாம் விசாரித்து அறிந்த வரையில் வேளாளக் கவுண்டர் கனவான்களே இப்போது நிற்கிற கனவான்களிடம் கொஞ்சமாவது பற்றுகள் இருப்பதாக காட்டிக் கொள்வதே இல்லை. கொஞ்ச நாளைக்கு முன் ஒரு உள்பாக கிராமத்திற்கு போய் இருந்தபோது அங்கேயே ஒரு யோக்கியமான வேளாளக் கனவானைக் கண்டு பேசிக் கொண்டு இருக்கையில் வேடிக்கையாக வரப்போகும் சட்டசபைத் தேர்தலில் தாங்கள் யாருக்கு ஓட்டுச் செய்யப் போகிறீர்கள் என்று கேட்டதில் உடனே மறுமொழியாக ஒரு ஓட்டு ஐயங்காருக்குப் போடுவோம். பாக்கி உள்ள இரண்டு ஓட்டுகள் நீங்கள் சொல்லுகிறபடி போடுவோம் என்றார்கள். மற்ற அந்த இரண்டு ஓட்டுக்கும் உங்களுக்கு கொஞ்சமாவது குறிப்பு இல்லையா என்று நாம் கேட்டதற்கு அவர் ஒன்று முதலியாருக்குப் போடலாம் என்று இருக்கிறோம். மீதியுள்ளதை செட்டியாருக்கு போட்டால் போகுது என்று அசார்சமாய் சொன்னார்கள். ஸ்ரீமான் ஐயங்காரைப் பற்றி மாத்திரம் உங்களுக்கு என்ன அவ்வளவு கவலை என்று கேட்டோம். அதற்கு உடனே பதிலாக ஐயங்கார் இதோடு இரண்டு மூன்று முறை நம்மை பார்த்தார். “உலக சேவை” என்கிற பத்திரிகை ஒன்று அனுப்பி வருகிறார். இம்மாதிரி நம்மைத் தேடி வந்து கேட்பவர்களை விட்டு விட்டு பின்னை யாருக்கு ஓட்டு செய்வது என்று கேட்டார்.

ஸ்ரீமான்கள் பட்டக்காரரும், கவுண்டரும் உங்கள் இனத்தாரல்லவா? அவர்கள் உங்களை நம்பித்தானே நின்று இருக்கிறார்கள். நீங்கள் அவர்களைப் பற்றியே நினைக்காமல் வேறு யார் யார் பெயரையோ சொல்லுகிறீர்களே என்று நாம் கேட்க, அவர்கள் நம்ம இனத்தார் அல்ல. ஒருவர் பட்டக்காரர் ஜாதியைச் சேர்ந்தவர் மற்றவர் கவுண்டர் ஜாதியைச் சேர்ந்தவர். நாங்கள் காட்டுக் குடியானவர்கள் ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தனக்கு இவர்கள் பெயரில் அருவருப்பு இருப்பது போல் சொன்னார். ஏனையா இப்படிச் சொல்லுகிறீர்கள்; அவர்களும் வேளாளர்கள்தானே என்று கேட்க, ஓட்டுக் கேட்கும் போது மாத்திரம் எல்லாம் ஒரு ஜாதி என்று சொன்னால் போதுமா? பட்டக்காரர்கள் என்பவர்கள் நாங்கள் தொட்ட சொம்பை கவிழ்த்து தான் வைக்க வேண்டும். அதன் பேரில் தண்ணீர் தெளித்துதான் எடுப்பார்கள். அவர்கள் சாப்பிடுவதை நாங்கள் பார்க்கக் கூடாது. எங்கள் வீட்டில் அவர்கள் ஜலபானம் கூட செய்ய மாட்டார்கள். நாங்கள் அவர்களை பட்டக்காரர் எசமாங்கோ என்று கூப்பிட மாத்திரம் ஆசைப்படுகிறார்களே யொழிய எங்களுடைய சுக துக்கங்களில் அவர்களுக்கு கொஞ்சமும் கவலை இல்லை. எங்களுக்காக அவர்கள் ஒரு வேலையும் செய்வதில்லை என்று சொன்னார்.

 

பிறகு கவுண்டர் அவர்களைப் பற்றி ஏன் அலக்ஷியமாகப் பேசுகிறீர்கள் என்று கேட்க, அவரும் அப்படித் தான் எங்களிடம் வந்து ஓட்டு கேட்பதையே அவமானமாகக் கருதுபவர்; தங்களை ஒரு தனி சமூகம் என்று நினைத்துக் கொண்டு இருப்பவர்; சர்க்காரில் பெரிய உத்தியோகத்தில் இருக்கிற வீட்டார் போல் அதிகாரத் தோரணையுடன் நடந்து கொள்ளுகிறவர்கள் அல்லாமலும் வேளாளர் பெயரைச் சொல்லிக் கொண்டு சகல கவுரவங்களும் தங்கள் குடும்பத்திற்கே வேண்டும் என்று சொல்லுகிறவர்கள். உதாரணமாக, பெரிய கவுண்டர் சட்டசபை மெம்பர், அதற்கிளையவர் தாலூக்காபோர்டு பிரசிடெண்ட், அதற்கிளையவர் ஜில்லா போர்டு வைஸ் பிரசிடெண்ட் (இது நிஜமல்ல, அவர்கள் சொந்தக்காரர்கள் என்று சொன்னோம்) இவ்வளவும் இருக்க ஜில்லா போர்டு பிரசிடெண்டும் தன் தம்பிக்கே வேண்டுமாம். இரண்டு தடவை ஆறு வருஷம் சட்டசபை மெம்பராய் இருந்துவிட்டு மறுபடியும் தானே சட்டசபைக்குப் போக வேண்டுமாம். என்ன ஆசை? மற்ற வெள்ளாளர் யாராவது இந்த உத்தியோகங்கள் பார்க்கக் கூடாதா? இவர்களேதானா வேளாளர் கூட்டத்திலேயே யோக்கியதை உள்ளவர்கள் என்று சொன்னார்.

நான் இதுகளைக் கேட்டதும் மிகுதியும் வருத்தமுற்று இம்மாதிரி வகுப்புகள் எப்படி முன்னுக்கு வரும் என்றும் இந்த ஒரு வகுப்பாரை நம்பித்தானே சர்க்கார் முதல் எல்லா ஜனங்களும் பிழைக்கிறார்கள். இப்படி இருக்க இவர்களுக்கும் இப்படி அபிப்பிராய பேதமிருக்கிறதே என்று வருத்தப்பட்டு மற்ற மூவர்கள் எந்த விதத்தில் இருவர்களைவிட உயர்ந்தவர்கள் என்று கேட்க, மற்றவர்களாவது இரண்டு கோணை எழுத்து (இங்கிலீஷ்) படித்திருக்கிறார்கள். ஏதோ ஒரு சங்கதிப் போல் நேராகச் சொல்லிக் கொள்ளலாம். சட்டசபைக்கு நிற்கும் பட்டக்காரர் வீட்டுக்கும் கவுண்டர் வீட்டுக்கும் போனால் பந்தக் காலைக் கட்டிக் கொண்டுதானே நிற்க வேண்டும் என்று சொன்னார்கள். இதைக் கேட்டவுடன் இங்கிலீஷ் படிப்புக்கும் குடியானவர்கள் நன்மைக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை என்றும் இம்மாதிரி நீங்கள் நினைப்பதே உங்கள் சமூகத்திற்கே கெடுதி என்றே சொன்னதோடு குடியான கனவான்களையே தெரிந்தெடுக்க வேண்டிய அவசியத்தையும் அவர்கள் எந்த விதத்திலும் மற்ற மூவர்களுக்கு இளைத்தவர்கள் அல்லவென்றும் தக்கப்படி சொல்லி கூடியவரை அவரின் மனதைத் திருப்பிவிட்டு நாம் போன காரியத்தையும் பார்த்து விட்டுத் திரும்பி வந்து விட்டோம்.

 

இந்த ஜில்லா சட்டசபைக்குக் கண்டிப்பாய் பார்ப்பனரல்லாதாராகவும் அதுவும் மூன்று பேரும் குடியானவர்களாகவுமே போக வேண்டுமென்பதே நமது உண்மையான ஆசை. அந்த நிலைமை நமக்கு வருகிறவரை சட்டசபைகள் என்பது நமக்கு ஆபத்தான கெட்ட சபைகள் என்றே சொல்லுவோம். ஒரு தேசத்தின் நன்மை அந்த தேசத்துக் குடியானவர்கள் நன்மையைத்தான் பிரதானமாகக் கொண்டதே அல்லாமல் வக்கீல்களுக்கும் லேவாதேவிக்காரருக்கும் சம்மந்தமே இல்லை. அல்லாமலும் நாட்டின் ஆதிக்கம் பார்ப்பனர் கையில் வருவது அந்த நாட்டிற்கே கேடாகும். உதாரணமாக, சுமார் 2000 வருஷங்களுக்கு முன்னாலேயே ஒளவை பிராட்டியார் மந்திரித் தன்மையாரிடம் இருக்க வேண்டும் என்று ஒரு அரசன் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் “நுலாலே நாடு கெடும், நுந்தமரால் வெஞ்சமராம், கோ லால் குடிய னைத்தும் கொள்ளைப்போம் - நாலாவான் மந்திரியுமாவான் வழிக்குத் துணையாவான்” என்று ஒரு பாட்டுப் பாடி இருக்கிறார். அது ஒளவையார் புராணத்திலும் தனிப்பாடல் திரட்டிலும் இருக்கிறது. அதன் பொருள் என்னவென்றால் நூலை அணிந்தவர்களாகிய பார்ப்பனர் கையில் அதிகாரம் இருந்தால் அந்த நாடு கெட்டுப்போகும் என்றும், அதற்கடுத்த அரசர்களிடம் அதிகாரம் இருந்தால் தேசத்தில் கலகம் நடைபெறும் என்றும், தராசு கோலுடைய வணிகர்கள் இடங்களில் அதிகாரம் வந்தால் செல்வத்தைக் கொள்ளையடித்து சேர்ப்பதிலேயே கவலையாயிருப்பார்கள் என்றும் நாலாவான் என்று சொல்லப்பட்ட வேளாளர்கள்தான் மந்திரி பதவி முதல் கொண்டு நம்பிக்கைக்கும் உரியவர்கள் என்றும் பொருள் கொண்ட பாட்டைப் பாடி இருக்கிறார். அல்லாமலும் 45000 வேளாள ஓட்டர்கள் தொகுதி கொண்ட வகுப்பார் அந்தத் தொகுதிக்கு தங்கள் வகுப்பிலிருந்து ஒரு பிரதிநிதி அனுப்ப முடியாமல் 5000 ஓட்டர் தொகுதி கொண்ட ஒரு பார்ப்பனர் 100 - க்கு 97 பேர் கொண்ட ஜனத்தொகுதிக்கு பாக்கி 65 ஆயிரம் ஓட்டர்களை ஏமாற்றி பிரதிநிதியாய் வரச் செய்வதென்றால் இதைவிட அந்தத் தொகுதிக்கும் அந்த நாட்டுக்கும் மானக்கேடான காரியம் வேறு எதுவும் இல்லை.

சட்டசபை ஸ்தானத்தைப் பொருத்தவரை அந்தப் பதவியை அனுபவிப்பதற்கோ தங்கள் சமூகத்தின் முன்னேற்றத்தை கவனிப்பதற்கோ மற்றவர்களைவிட இவ்விரு கவுண்டர் கனவான்களும் ஒரு விதத்திலும் தாழ்ந்தவர்கள் அல்ல என்று நாம் பந்தயம் கூறுவோம். கவுண்டர்கள் இருவரும் இப்பொழுதும் ஒற்றுமையோடு வேலை செய்யப் பிரயத்தனப்பட்டால் கிராமக் குடியானவர்களின் தப்பபிப்பிராயத்தை மாற்றி வெற்றி பெறக் கூடும் என்றே நினைக்கிறோம். கோவை ஜில்லா போர்டு தலைவர் தேர்தல் நடக்கும் வரை கவுண்டர், செட்டியார், முதலியார் என்று சொல்லிக் கொள்ளும் வேளாளர்களான மூன்று பார்ப்பனரல்லாதார்களே இவ்வருஷம் வெற்றிப் பெறக் கூடிய நிலைமை நமது ஜில்லாவில் ஏற்பட்டிருந்தது. இந்த நிலைமை உண்டாக்குவதற்கு நாமும் எவ்வளவோ பங்கெடுத்துக் கொண்டோம். அப்படி இருக்க இப்போது எப்படியோ அந்த நிலைமை மாறிவிட்டது. இப்போதும் தக்க முயற்சி எடுத்துக் கொண்டால் இரு கவுண்டர் கனவான்களில் யாராவது ஒருவராவது வெற்றி பெறச் சௌகரியமிருக்கிறதென்றே சொல்லுவோம். அதாவது இரண்டு கனவான்களில் யாராவது ஒருவர் மற்ற கவுண்டர் கனவானுக்காகப் பின்வாங்கிக் கொள்ளவேண்டும். இதில் பட்டக்காரக் கவுண்டர் அவர்கள் வாங்கிக் கொள்வதே அதிக அனுகூலம்.

நாம் இப்படிச் சொல்வதால், ஸ்ரீமான் பட்டக்காரர் வேணாவுடையக் கவுண்டர் சட்டசபைக்கு வரக்கூடாதென்றாவது அவரைவிட ஸ்ரீமான் வி.சி. வெள்ளியங்கிரிக் கவுண்டர் உயர்ந்தவர்கள் என்றாவது நாம் சொல்வதாக யாரும் நினைக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்ளுகிறோம். பட்டக்காரக் கவுண்டர் அவர்கள் அதிக காலதாமதமான பிறகு வந்திருக்கிறார்கள் என்பதும் தனக்குள்ளாகவே மற்றவர்களைப் போல் அவ்வளவு தீவிரமான பிரசாரம் செய்வதற்கு யோசித்துக் கொண்டிருக்கிறார் என்றே கேள்விப்படுகிறோம். மற்றபடி சட்டசபைப் பெருமையையும் பதவியையும் அடைய ஸ்ரீமான் கவுண்டர் அவர்களைவிட பட்டக்காரர் அவர்கள் உரிமை உள்ளவர்கள் என்று தான் சொல்லுகிறோம். பாக்கி இருக்கும் பார்ப்பனரல்லாத கனவான்கள் மூவரும் ஸ்ரீமான் பழையக் கோட்டை பட்டக்காரர் அவர்களும் மற்றும் பல பிரபலஸ்தர்களும் ஒரு அறிக்கையில் கையொப்பமிட வேண்டும். எலக்ஷனுக்கு என்று ஒரு பிரசாரக் கமிட்டி ஏற்பாடு செய்து அதன் மூலம் ஒற்றுமையாய் தந்திர மந்திரமில்லாமல் வெளிப்படையாய் பிரசாரம் செய்ய வேண்டும். இம்மாதிரி ஒரு ஏற்பாடும் இல்லாமல் யார் பின்வாங்கிக் கொண்டாலும் பிரயோஜனப் படாது என்றே சொல்லுவோம். இப்படிக்கு செய்ய முடியாவிட்டால் ஸ்ரீமான் வி.சி. வெள்ளியங்கிரிக் கவுண்டர் அவர்களாவது தயவு செய்து கொஞ்சம் கவலை வைத்துத்தான் தனியாய் ஓட்டர்களை எல்லாம் ஒரு தடவை நேரில் போய்ப் பார்க்க முயற்சி செய்ய வேண்டும்.

இப்போது ஸ்ரீமான் வெங்கிட்ட ரமணய்யங்கார் அவர்களுக்கு இருக்கும் சட்டசபை யோக்கியதைகள் எல்லாம் ஒவ்வொரு கிராமத்தையும் இரண்டு தரம், மூன்று தரம் போய்ப் பார்த்துதான் முக்கியமாய் ஏற்பட்டன. அவர் பணம் செலவு செய்கிறார் என்பதைப் பற்றிக்கூட அவ்வளவு நாம் கவலைப்பட வேண்டியதில்லையாதலால் ஸ்ரீமான் வி.சி.வி. கவுண்டர் அவர்களும் தயவுசெய்து எல்லா கிராமத்தையும் ஒரு தடவையாவது பார்த்து வரவேண்டும் என்று மறுபடியும் கேட்டுக் கொள்கிறோம். அனாவசியமாக சில யோக்கியமான குடியானவர்களுக்குள் இருந்து வரும் தப்பபிப்பிராயத்தை மாற்ற பிரயத்தனப்பட வேண்டியது அதைவிட முக்கியமானதாகும். நமது ஜில்லாவுக்கு சுயமரியாதையும், பகுத்தறிவும் இருப்பது மெய்ப்பிக்க வேண்டுமானால் ஸ்ரீமான் வி.சி. வெள்ளியங்கிரிக் கவுண்டர் உள்பட மூன்று பார்ப்பனரல்லாத கனவான்களே வெற்றி பெற வேண்டியது அவசியமாகும். இச்ஜில்லாவின் ஓட்டர்களுக்கு ஓட்டின் கடமையை எடுத்துச் சொல்லி அவர்களை உண்மையான ஓட்டருக்கு தகுதி உடையவர்களாக்கி வைத்திருக்க வேண்டியது ஸ்ரீமான் கவுண்டரின் கடமையாய் இருக்கிறது. அக் கடமையை அவர் சரியாய் செய்யாத குற்றத்திற்காக கவுண்டர் தோல்வி அடைந்தால் அது ஆச்சரியமாகாது. ஆனால் அச்சமூகத்திற்கே மானக்கேடாகும். ஆதலால் இச்ஜில்லா பார்ப்பனரல்லாத அபேக்ஷகர்கள் தங்கள் தங்கள் சுயநலத்தையும், ஒருவரை ஒருவர் மோசஞ் செய்ய நினைத்திருப்பதையும், ஒருவர் பேரில் ஒருவர் புறங்கூறிக் கொண்டு திரிவதையும், ஒருவரை ஒருவர் நம்பாமல் மோசம் போவதையும் விட்டு விட்டு உண்மையாய் ஒன்றுபட்டு பிரசாரம் செய்தால் வெற்றி பெறலாம் என்றும் இப்பொழுதும் அதிக காலதாமதமாகி விடவில்லை என்றும் விண்ணப்பம் செய்து கொள்ளுகிறோம்.

(குடி அரசு - கட்டுரை - 26.09.1926)

Read 20 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.