1857-ஆம் ஆண்டில் நடந்த சிப்பாய்க் கலகம் என்னும் ஒரு கலவரத்தை இந்தியாவின் விடுதலைக் கிளர்ச்சி என்று பெயர் வைத்து, இன்றைக்கு அது நடந்து 100 ஆண்டு களாகின்றன. ஆதலால் இந்தியாவின் விடுதலைக் கிளர்ச்சியின் நூறாவது ஆண்டு விழா கொண்டாடுவது என்ப தாக ஒரு விழா கொண்டாடப்படுகிறது.
1857-இல் இந்தியா விடுதலையடைய வேண்டும் என்பதான ஒரு எண்ணமே இந்தியாவில் யாருக்கும் இருந்ததாகத் தெரியவில்லை, 1857-இல் மாத்திரமன்று காங்கிரசு ஏற்பட்டதாகச் சொல்லப் படும் 1886-ஆம் ஆண்டில் காங்கிரசை ஏற்பாடு செய்த பெருந்தலைவர்கள் என் பவர்கள் கூட இந்தியா விடுதலை யடைய வேண்டும் என்ற எண்ணத் தின்மீது காங்கிரசை ஏற்படுத்தவில்லை.
இதற்கு ஆதாரம் வேண்டுமானால், காங்கிரசின் துவக்க விழாவையும், அதன்பின் ஒவ்வொரு ஆண்டும் காங் கிரஸ் விழாவிலும் இந்தியாவின் பெருந்தலைவர்கள் பேசி இருக்கும் பேச்சுக்களையும், அவற்றில் வெகு காலம் செய்யப்பட்டு வந்திருக்கும் தீர்மானங்களையும் ஊன்றிப் படித்துப் பார்த்தால் தெரியும்.
இவை ஒருபுறமிருக்க இந்த நாடு என்றையதினம் சுதந்திர நாடாக இருந்தது? என்றையதினம் நல்ல ஆட்சி நாடாக இருந்தது என்பதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டோ, ஆதாரமோ, காணமுடிவதில்லை. சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் தமிழ்நாட்டுக்கு (திராவிட நாட்டுக்கு) ஒரு உண்மையான ஆதாரப் பூர்வமான நடுநிலை கொண்டதான ஒரு சரித் திரமே காண முடிவதில்லை.
இந்த நாட்டு ஆட்சிக்கு எடுத்துக் காட்டாக, ஆபாசக்காட்டுமிராண்டித் தனமான கற்பனைப் புராண இதி காசங்களிலுள்ளவைகளைத்தான் சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, அறிவும், ஆண்மையும் நீதியும் கொண்ட தான ஒரு ஆட்சியோ, ஆட்சி முறையோ இருந்ததாகக் கருதக்கூட இடமில்லை.
சேர, சோழ, பாண்டிய ஜாதியரான அரசர்கள் யோக்கியதையையும் அவர்கள் மக்களுக்கு செய்த நன்மையையும் சரித்திர ஆதாரப்படி கவிராயர்களின் கவிப்படி பார்ப்போமானல், நம் தமிழரசர்கள் யோக்கியதை யெல்லாம் பெருங்கோவில் கட்டிச் சோம்பேறி களும் அறிவற்ற நபர்களும் மக்களை வஞ்சித்து இங்கு மடையர்களாக ஆக்கி வாழ்ந்து வந்தார்கள் என்பதைத்தான் சரித்திரமூலமாகவும், பிரத்தியட்ச அனுபவ மூலமாகவும் காண்கிறோம்.
மற்றும் தமிழரசர்களின் ஆட்சிக்கு மற் றொரு எடுத்துக்காட்டு வேண்டுமா னால் இந்திய உபகண்டத்தில் இந்தத் தமிழ் நாட்டைப்போல் ஏராளமான கோவில்களைக் கொண்ட நாடு வேறு எங்குமில்லை என்பதும், தமிழ்நாட்டு மக்களைப்போல் மடமை, மூட நம்பிக்கையில் ஆழ்ந்து, மானம் என்றால் என்ன என்பதை ஒரு சிறு அளவு கூட அறிந்திருக்க முடியாத பாமரமக்களை வேறு எங்குமே காணமுடிவதில்லை என்பதும்தான்.
தமிழரசர்கள் கடுகளவு அறிவும், தன் மானமும் உடையவர்களாக இருந் திருந்தால், இந்த நாட்டில் 2000, 3000 ஆண்டுகளாக இந்த நாட்டு மக்கள் - பழங்குடி மக்கள் கடைச் சாதியாம், இழி மக்களாய் இருந்திருக்க முடியுமா? எந்த அரசனாவது தானுட்பட - தன்னின மக்கள் 100க்கும், 90-க்கு மேற்பட்ட வர்கள் கீழ்மக்களாய், இழி மக்களாய் இருக்கிறார்களே என்று சிந்தித்ததாகக் காண முடிகிறதா?
கோவில்களுக்கும், சத்திரங்களுக்கும், மடங்களுக்கும், அவற்றின் விழாக்களுக்கும், விளம்பரங் களுக்கும் விடப்பட்டிருக்கும் சொத்துக் களையும் - அதே நேரத்தில் இந்நாட்டு மக்களின் கல்வியறிவு பெருகுவதற்கு ஏற்ற நடவடிக்கை எடுக்காதபடி விட்டிருக்கும் தன்மையும் மற்றும் நம் மக்களுக்கு நல்லறிவும், நல்லொழுக்கமும் புகுத்த பாடுபட்ட பவுத்தர்களையும், சமணர்களையும் வெட்டியும், சித்ர வதை செய்தும் கழுவேற்றியும் கொடுமை செய்த சரித்திரத்தையும், நடப் பையும் பார்த்தால் நம் தமிழரசர்கள் ஆட்சி ஒரு கொடுங்கோன்மையும், காட்டு மிராண்டித் தனமும் கொண்ட ஆட்சி என்பதைத் தவிர வேறு என்ன ஆட்சி என்று சொல்லமுடியும்?
ஆகவே நம் நாட்டுக்கு, நம் மக்களுக்கு ஒரு விடுதலை ஏற்பட்ட காலம் என்று சொல்ல வேண்டு மானால் அந்த விடுதலைக்கு என்ன அர்த்தம் சொல்வதானாலும் இந்நாடு அன்னியர் ஆட்சிக்கு வந்த காலமே யாகும். இப்போதும்கூட வெள்ளையர் இந்தியாவைத் தன் நாட்டு வளத்திற் காகச் சுரண்டுவதை முதல் நோக்கமாகக் கொண்டனர்.
அடுத்தபடியாக இந்திய மக்களிடையே உள்ள ஜாதிப்பிரிவு, காட்டுமிராண்டித்தனமான சமயம், கடவுள், சமய ஆதாரங்கள், நெறிகள் ஆகியவைகளில் நல்ல மாறுதல் ஏற்படவேண்டுமென்றும். இந்திய மக்கள் கல்வி அறிவு ஆகியவைகளில் தலை சிறந்து விளங்க வேண்டுமென்றும் கவலைகொண்டு இந்திய மேல் சாதிக் காரர்களின் பலமான எதிர்ப்பையும் சமாளித்து எவ்வளவோ மாறுதல்களை உண்டாக்கியிருக்கிறான் என்பதை மறுக்க முடியாது.
மதத்தை முன்னிறுத்தி....
1857-இல் நடைபெற்ற இந்தக் கலவரமானது உண்மையில் வெள் ளையனுடைய ஆதிக்கம் இந்தியத் துணைக்கண்டத்தில் ஏற்படுவது கூடாது, அரசியல் ஆதிக்கம் அன்னியரிடத்திலா இருப்பது? என்ற கருத்தில் அல்ல என்பதை அப்போது நடைபெற்ற நிகழ்ச்சிகளை முன்வைத்து பார்த்தால் அறியலாம்.
லார்டு டல்ஹவுஸியின் சீர்திருத்தங்கள் ஒரு சிலரான பார்ப் பனர்கட்கு ஏகபோக உரிமையாக இருந்த கல்வியை நாடெங்கும் எல்லோரும் படித்துப் பயன்பெறும் வண்ணம் பரப்பிய முறை, ரயில் நீராவி என்ஜின், தந்தி சாதனம் போன்ற சீர்திருத்தங்களைக் கண்டு, வைதீக மேல் சாதிக்காரர்கள் என்பவர்கள் வெகுண்டார்கள்.
துப் பாக்கிகளில் கொழுப்பைத் தடவிக் கொடுத்தனர் என்ற குற்றச்சாட்டிலும் கூட இந்து சிப்பாய்களிடம் அது பசுமாட்டுக்கொழுப்பு என்றும் முஸ்லீம் சிப்பாய்களிடம் அதுபன்றிக் கொழுப்பு என்றும் பிரச்சாரம் செய்து அவரவர் களுக்கு உள்ள மத உணர்ச்சியையும், அதனடியாகப் பிறந்த மூடநம்பிக்கை யையும் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதைக் காட்டுகிறது.
நெற்றியில் மதக்குறிகளை யாரும் அணியக்கூடாது எல்லாச்சிப்பாய்களும் ஒரே மாதிரியான உடையையே உடுத்த வேண்டும், தாடி வைத்துக் கொள்ளக் கூடாது, காதணி அணியக்கூடாது என்பன போன்ற விதிகளின் மூலம், வெள்ளையர்கள் இவர்களுடைய மதத்தத்துவங்களைத் தகர்த்தெறியச் செய்கிறார்கள் என்ற கண்ணோட்டத் துடன் தான் அவைகளை நோக் கினார்கள்.
அதுபோலவே கடலைத் தாண்டி பர்மா முதலிய நாடுகளுக்குப் போரிடச் செல்ல வேண்டும் என்ற விதி, தங்க ளுடைய இந்து மத சாஸ்திரத்திற்குப் புறம்பான முறையில் அமைந்துள்ளது என்றே நினைத்துக் கொதித்தெழச் செய்தார்கள்.
ரயில் வசதியும், படிப்பு வசதியும் மற்ற விஞ்ஞான சாதனங்களின் மூலம் கிறிஸ்துவ மதத்தத்துவங்கள் பரவ ஏது உள்ளது என்றும், அதனால் இந்து மதம் எங்கு அழிந்து விடுமோ என்ற பயமும் சிப்பாய்களைத் தூண்டிவிட்ட மேல் சாதிக்காரர்களுக்கு இருந்தது என்பது ஒரு மாபெரும் உண்மையாகும்.
மேற்கண்ட உண்மைகளை வைத்துப் பார்த்தால் 1857 கிளர்ச்சி, வெள்ளை யனுடைய ஆதிக்க வாழ்வை எதிர்த்து ஏற்பட்டது அன்று என்பதும் அவனு டைய சீர்திருத்தங்களினால் விளைந்த பலன்களை எதிர்த்தே என்பதும் புலனாகும். உதாரணமாகப் பெண்கள் உடன்கட்டையேறும் பழக்கமான சதி என்ற முறையைச் சட்டத்தின் மூலம் வெள்ளைக்காரன் ஒழித்தபோது ஏற்பட்ட வைதீகர்களின் கூக்குரலை வெள்ளைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துக் கிளப்பிய விடுதலைச் சங்கு ஒலி என்று கொள்ள முடியுமா? அதுபோலவேதான் இந்த 1857 நிகழ்ச்சியும்.
அப்படியே விடுதலைப் போராட் டத்தின் ஆரம்பக்கட்டம் 1857 என்றே வைத்துக்கொண்டாலும், நமது தமிழ் (திராவிட) மக்களைப் பொறுத்தவரை யில் இன்றைய நிலையிலாவது விடுதலை பெற்றவர்களாகத் திகழ்கிறர்களா? என்பது சிந்திக்கத்தக்கது. வெள்ளைக் காரன் காலத்தில் எப்படி எதற்கெடுத் தாலும் லண்டனுக்கு ஓடி முடிவுகளைச் செய்தார்களோ, அதே தன்மையில் இப்போது டெல்லிக்கு ஓடி முடிவு களுக்காகக் காத்திருக்க வேண்டியுள் ளது.
தொழிற் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை போன்ற சிறு சங்கதிகளில் கூட டெல்லியின் ஆணையைத் தலையின் மேல் நாம் தாங்க வேண்டியுள்ளது என்றால் நாம் எப்படி விடுதலை பெற்றவர்களாவோம்?
வெள்ளைக்காரனுக்கு வால்பிடித்து அவனை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு எந்தக்கட்டத்தில் அவனால் தங்களினத்திற்கும், சுயநல வாழ்விற்கும் முடிவு ஏற்படும் என்று எண்ணி னார்களோ அன்று தான் அவனை வெளிப்படையாக எதிர்க்க முன்வந்தனர். மேல் சாதிக்காரர்கள் என்ற பார்ப் பனர்கள்.
1857 ஆம் ஆண்டு ஏற்பட்ட கிளர்ச்சியில் கலந்துகொண்ட மற்ற சுதேச மன்னர்கள். நானாசாயபு போன்றவர்களும் தங்கள் கையிலிருந்த ஆதிக்கம் மாறிவிட்டதே என்ற சுயநல நோக்கத்தில்தான் சேர்ந்தார்கள். நாட்டு விடுதலை என்ற பரந்த நோக்கத்தால் அல்ல என்று சரித்திரம் படிப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
வெள்ளைக்காரனின் ஆதிக்கத்தால் அரசியல் அடிமைத்தனம் ஏற்பட்டது என்பது விவகாரத் திட்டமானதாக இருந்தாலும், வெள்ளையராட்சி யாலேயே சமுதாய எழுச்சி இந் நாட்டில் ஏற்பட்டது என்பது மறுக்க முடியாத ஒரு உண்மையாகும். நாம் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற சுதந்திரக் கிளர்ச்சி எண்ணம் நமக்குப் பிறந்ததற்கே அடிப் படைக்காரணம் ஆங்கிலக் கல்வி. என்று பண்டித ஜவகர் லால் அவர்களே பல இடங் களில் பேசியும் எழுதியும் உள்ளார்கள்.
எனவே 1857 நிகழ்ச்சியை நாட்டின் விடுதலைப் போராட்டத்தின் முதல் நிகழ்ச்சியாகக் கருத இடமில்லை. மாறாக, வைதீக எண்ணங்களைத் தாக்கும் பழமை, மதம் - இவைகளைப் பாதுகாக்கவும் செய்யப்பட்ட ஒரு முயற்சியாகும். மேல் நாடுகளில் சுதந்திர நாள் சுதந்திர ஆண்டு விழாக்கொண்டாடு வது போல் நம் நாட்டில் சுதந்திர நாள் கொண்டாடுவது புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டுக் கொண்டது போலவே ஆகும்.
மேல் நாட்டார்கள் சுதந்திரம் பெற்ற பின், பெற்ற நாளைக்குறி வைத்துக் கொண்டாடுகிறார்கள். நாம் அதுபோல் கொண்டாட நமக்குச் சுதந்திரம் வந்து விடடதா? நாம் ஏதா வது சுதந்திரத்தை அனுபவிக்கின் றோமா? என்பதைப் பற்றி நமக்கு கடுகளவு யோசனையும் இல்லாமல் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருப்ப வர்கள் ஆட்சிக்கும், வஞ்சகத்திற்கும் ஆளாகி, அடிமைத்தளையை நெருக்கிக் கொள்ள நாம் சுதந்திர விழா கொண் டாடுகிறோம்.
இந்தச் சுதந்திர விழா - பணக்காரர் மீது ஏழை மூடமக்களை ஏவி விடு வதாக இருக்கிறதே ஒழிய மனிதனை (நம்மை) நாய், பன்றியிலும் கேடாக இழிவுப்படுத்திக் கீழ்ச்சாதி ஆக்கப் பட்ட கடவுள், சாஸ்திரங்களையோ, சட்டங்களைப்போல மக்களைப்போல ஏன் என்று கேட்க நாதி இல்லை. சுதந்திர நாட்டில் பிராமணன், சூத்திரன், பறையன், சக்கிலி இருக்க லாமா? அப்படி இருக்கும் நாடு சுதந்திர நாடா? நரக நாடா?
இதை ஒழிக்கப்பாடுபட இந்த நாட்டில் ஏதாவது உரிமை இருக்கிறதா? உரிமை கேட்க வழி இருக்கிறதா? சுதந்திர நாட்டில் மனித சமுதா யத்தையே அடிமைப்படுத்தி மடையர் களாக ஆக்கி வைத்திருக்கும் இனத் தவர் (பார்ப்பனர்) மந்திரியாய், தலை வராய் இருக்கிறார்கள் என்றால் இது சுதந்திர நாடாகுமா? சுதந்திர உணர்ச்சியுள்ள நாடாகுமா?
யோக்கியமான முறையில் பேச்சுரிமை இல்லை, கூட்டம் போட உரிமையில்லை; லவுட் ஸ்பீக்கருக்கு லைசென்ஸ் வேண்டும்; பணம் கட்ட வேண்டும்; கூட்டம் போட உள்ள இடங்கள் இராணுவத்திற்குக் கொடுக் கப்பட்டு விட்டன என்கிறார்கள்.
தமிழனுக்குப் பார்ப்பான் மாத்திரம் எஜமானனல்லன்; மலையாளியும் எஜமான், அதிகாரி, வடநாட்டான் முத லாளி, சர்வாதிகாரி, இது தமிழ் நாட் டுக்குச் சுதந்திரமா? மற்ற நாட்டுக்குச் சுதந்திரமா? சுதந்திரத்தை நினைத்து கொண்டு எழுத எழுத ஆத்திரம் வருகிறது. இத்துடன் நிறுத்தி கொண்டேன்.